கோலாலம்பூர், செப். 30 - ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்காக
போட்டி நிலையிலிருந்து ஒத்துழைப்பு நிலைக்கு மாறும் பக்கத்தான்
ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கட்சிகளின் முடிவை மக்கள்
ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டதையும் நாட்டின் நிலைத்தன்மைக்கான
அறிகுறியாகவும் அண்மைய இடைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
ஒற்றுமை அரசைப் பிரதிநிதிக்கும் பாரிசான் நேஷனல் அண்மையில்
போட்டியிட்ட கிளந்தான் மாநிலத்தின் நெங்கிரி மற்றும் ஜோகூர்
மாநிலத்தின் மக்கோத்தா இடைத் தேர்தல் முடிவுகளின் வழி இந்த
அறிகுறியைக் காண முடிகிறது என்று அரசியல் ஆய்வாளரான இணைப்
பேராசிரியர் டாக்டர் கைருனேசா இசா கூறினார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் களைவதற்கு ஏதுவாக சித்தாந்த
வேறுபாடுகளை குறைப்பதன் மூலம் நல்லிணக்கத்தையும் சிறப்பான
மேம்பாட்டையும் கொண்டு வர முடியும் என்று அவர் சொன்னார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கோத்தா தொகுதி இடைத் தேர்தலில்
பாரிசான் நேஷனல் வேட்பாளர் சைட் ஹூசேன் சைட அப்துல்லா 20,648
வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். சைட் ஹூசேனுக்கு
27,995 வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட
பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது ஹைசான் ஜாபருக்கு 7,347
வாக்குகளைப் பெற்றார்.
நெங்கிரி இடைத் தேர்தலிலும் பாரிசான் நேஷனல் வேட்பாளரான
அஸ்மாவி பிக்ரி அப்துல் கனி 3,352 வாக்குகள் பெரும்பான்மையில்
வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவருக்கு 9,091 வாக்குகளும்
பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது ஹைசான் ஜாபருக்கு 7,347
வாக்குகளும் கிடைத்தன.
இவ்விரு தேர்தல்களிலும் கிடைத்த வெற்றி பாரிசானுக்கு புதிய
வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு வரும் பொதுத் தேர்தலில்
அக்கூட்டணிக்கு கிடைக்கக் கூடிய பிரகாசமான வாய்ப்புகளை
பிரதிபலிக்கிறது என்று துன் ஹூசேன் ஓன் பல்கலைக்கழகத்தின் பொதுக்
கல்வி மற்றும் இணைப்பாட மையத்தின் முதன்மை விரிவுரையாளருமான
அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த வெற்றி குறித்து கருத்துரைத்த மலேசிய அறிவியல்
பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் ஆய்வியல் துறையின் அரசியல்
ஆய்வாளரான பேராசிரியர் டத்தோ டாக்டர் சிவமுருகன் பாண்டியன்,
தொடக்கத்தில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிய பக்கத்தான்-பாரிசான்
உறவு தற்போது மேம்படத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.


