NATIONAL

கெடாவில் வெள்ளப் பாதிப்பு அதிகரிப்பு- 1,359 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்

30 செப்டெம்பர் 2024, 4:33 AM
கெடாவில் வெள்ளப் பாதிப்பு அதிகரிப்பு- 1,359 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்

அலோர்ஸ்டார், செப். 30 - கெடா மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பு தொடர்ந்து

அதிகரித்து வரும் நிலையில் வெள்ள அகதிகளைத் தங்க வைப்பதற்காக

நேற்று மேலும் மூன்று தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.

இம்மாநிலத்தில் புதிய நிவாரண மையங்களைச் சேர்ந்த மொத்தம் 11

மையங்கள் தற்போது செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் 436

குடும்பங்களைச் சேர்ந்த 1,359 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு

இந்த எண்ணிக்கை 293 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேராக மட்டுமே

இருந்தது.

கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் தித்தி காஜா தேசிய பள்ளியில்

திறக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 145

பேர் அடைக்கலம் நாடியுள்ளதாக சமூக நலத் துறையின் பேரிடர் தகவல்

அறிக்கை கூறியது.

கப்பாளா பாத்தாஸ் தேசிய இடைநிலைப்பள்ளியில் உள்ள துயர் துடைப்பு

மையத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேரும் அலோர் மேரா தேசிய

இடைநிலைப் பள்ளியில் உள்ள மையத்தில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 123

பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பொக்கோ செனாவில் உள்ள சூராவ் டேசா கெடா

டெராங்கில் புதிதாக ஒரு துயர் துடைப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதனுடன் சேர்ந்த இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வரும் துயர் துடைப்பு

மையங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இந்த ஐந்து

மையங்களிலும் 231 குடும்பங்களைச் சேர்ந்த 734 பேர் தங்கியுள்ளனர்.

குபாங் பாசு மாவட்டத்தின் சங்லுன் இடைநிலைப்பள்ளி, டேவான் லுபோக்

பத்து மற்றும் பண்டார் பாரு டாருள் அமான் ஆகிய இடங்களில்

திறக்கப்பட்டுள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் 98

குடும்பங்களைச் சேர்ந்த 284 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.