கோலாலம்பூர், செப். 30 - ஓப் குளோபல் நடவடிக்கையின் போது கைது
செய்யப்பட்ட ஜி.ஐ.எஸ்.பி. ஹோல்டிங்ஸ் (ஜி.ஐ.எஸ்.பி.எச்.) நிறுவனத்துடன்
தொடர்புடைய சில நபர்களுக்கு எதிரான தடுப்புக் காவல் அனுமதி
நீடிக்கப்பட்டுள்ளது.
சிறார்களை உடலுழைப்புத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தி சுரண்டல்
நடவடிக்கையில் ஈடுபட்டது மற்றும் சமயப் பழைமைவாதம் உள்ளிட்ட
நடவடிக்கைளை மேற்கொண்டதாக கூறப்படும் அந்த நிறுவனத்திற்கு
எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் உதவுவதற்கு ஏதுவாக
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான தடுப்புக் காவல் அனுமதியை காவல்
துறையினர் நீடித்துள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 முதல் 55 வயது
வரையிலான ஏழு ஆடவர்களை மேலும் ஏழு நாட்களுக்குத் தடுத்து
வைப்பதற்கு போலீசார் ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
விண்ணப்பம் செய்திருந்தனர். அந்த விண்ணப்பத்தை துணைப் பதிவதிகாரி
நுர்ஷஹிரா அப்துல் சலிம் ஏற்றுக் கொண்டு அவர்களை தடுத்து
வைப்பதற்கான அனுமதியை வழங்கினார்.
கிளந்தான் மாநிலத்தின் மாச்சாங் மாஜிஸ்திமன்றத்தில் ஜி.ஐ.எஸ்.பி.எச்
நிறுவனத்துடன் தொடர்புடைய ஒருங்கிணைந்த தொடக்கப்பள்ளி
ஆசிரியரான 66 வயது நபரை நேற்று தொடங்கி மூன்று நாட்களுக்கு
தடுத்து வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டது.
இதனிடையே, ஜி.எஸ்.பி.எச். மற்றும் அல்-அர்க்காம் அமைப்புகளுன் பாஸ்
கட்சி உறுப்பினர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கிளந்தான்
மாநில பாஸ் கட்சித் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் முகமது
ஃபாட்சில் ஹசான் கூறினார்.
இம்மாத தொடக்கத்தில் ஓப் குளோபல் அதிரடிச் சோதனை
தொடங்கப்பட்டது முதல் ஜி.ஐ.எஸ்.பி.எச். நிறுவனத்தின் உயர்நிலை பொறுப்பாளர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதோடு 572 பேரும் அவர்களின் பிடியிலிருந்து மீட்கப்பட்டனர். இந்த அமைப்பைச் சேர்ந்த எண்மர் பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.


