NATIONAL

சொத்துகளை அறிவிக்க எப்போதும் நான் தயார்- பிரதமர் கூறுகிறார்

27 செப்டெம்பர் 2024, 2:24 AM
சொத்துகளை அறிவிக்க எப்போதும் நான் தயார்- பிரதமர் கூறுகிறார்

கோலாலம்பூர், செப். 27- தனது சொத்து விபரங்களை அறிவிக்க எப்போதும் தாம் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப் படக் கூறினார்.

சொத்துகளை அறிவிக்க யாராவது நாளை எனக்கு கோரிக்கை விடுத்தால் நான் அவ்வாறு செய்யத் தயாராக இருக்கிறேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழத்திற்கு தோண்டுங்கள். அப்போதுதான் தலைவர்களாகவும் சிறந்த முன்னுதாரணமாகவும் ஆக முடியும். இல்லாவிடில் நாம் மக்களுக்கு எதனைப் போதிப்பது? சிறப்பான நிர்வாகத்தின் வாயிலாக மட்டுமே இஸ்லாத்தின் மாண்பை உயர்த்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

சொத்துகளை அறிவிக்கச் சொன்னால் சிலர் கோபப்படுகிறார்கள். நாம் பழிவாங்குகிறோம் என்கிறார்கள். நீங்கள் தவறு செய்யா விடில் சொத்துகளை அறிவிப்பதில் உங்களுக்கு ஏன் அச்சம்? என அவர் கேள்வி எழுப்பினார்.

நேற்று இங்குள்ள தாமான் ஆலம் சூத்ராவில் தாபிஷ் ஒருங்கிணைந்த அறிவியல் இடைநிலைப் பள்ளி வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள நிபந்தனைகளில் ஒன்றான சொத்துகளை அறிவிக்கக் கோருவது, முந்தைய அரசாங்கம் கடைபிடித்ததைத் போல் அரசு நிர்வாகப் பிரிவினரை மட்டும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பெரிக்கத்தான் நேஷனல் தலைமை கொறடாவான டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் முன்னதாக கூறியிருந்தார்.

தற்போதைய அரசாங்கம் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி வருவதாக அன்வார் தனது உரையில் குறிப்பிட்டார்.

சில தரப்பினர் மலாய்க்காரர்கள், இஸ்லாம் மற்றும் சமயம் பற்றி பேசி வருகின்றனர். உண்மையில் அவர்கள் தான் நாட்டின் வருமானத்தையும் வளங்களையும் கொள்ளையிட்டனர். இது போன்ற சம்பவங்கள் இங்கு நிகழக்கூடாது.

 ஏறக்குறைய ஒவ்வொரு குத்தகையையும் நாம் சரிபார்த்து வரும் வேளையிலும் கூட சில இடங்களில் கசிவுகள் நிகழ்கின்றன. நிதி காணாமல் போகிறது. ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நிதி க் கசிவு ஏற்பட்டால் நாடு எப்படி முன்னேற்றம் காணும் என அவர் கேள்வி எழுப்பினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.