ஷா ஆலம், செப் 26 - வெள்ளத்திற்குப் பிந்தைய துப்புரவுப் பணிகளில் உதவுவதற்காக சிலாங்கூர் தன்னார்வலர்கள் (செர்வ்) கெடா மாநிலத்தின் அலோர் ஸ்டார் நகருக்குச் சென்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பதினாறு உறுப்பினர்களைக் கொண்ட செர்வ் குழு கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் உள்ள கம்போங் சுக்கா மெனாந்தி மற்றும் அலோர் மேரா ஆகிய பகுதிளைச் சுத்தம் செய்யும் பணியில் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
கெடாவில் நேற்று காலை 1,745 குடும்பங்களைச் சேர்ந்த 5,454 பேராக இருந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாலை 4.00 மணியளவில் 939 குடும்பங்களைச் சேர்ந்த 2,942 பேராக குறைந்துள்ளது.
கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் 521 குடும்பங்களைச் சேர்ந்த 1,576 பேர் இன்னும் எட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள வேளையில் பெண்டாங்கில் உள்ள பத்து துயர் துடைப்பு மையங்களில் 366 குடும்பங்களைச் சேர்ந்த 1,220 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த செர்வ் அமைப்பு தற்போது 5,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் நெருக்கடிகள் மற்றும் பேரிடர்களைக் கையாள்வதில் சமூகங்களுக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளனர்.


