ஷா ஆலம், செப். 26 - சுங்கை பூலோ, டேசா அமான் தொழிற்பேட்டை பகுதியில் வடிகால் பகுதியில் இரசாயனப் பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் எட்டு உருள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஆய்வுக்காக இரசாயன மாதிரிகளைச் சேகரிக்கும் பணியில் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட்டுள்ள வேளையில் இச்சம்பவம் தொடர்பில 1999 ஆம் ஆண்டு லுவாஸ் சட்டத்தின் 79(4)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
இந்த சம்பவத்தினால் நீர் சுத்திகரிப்பு பணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனக் கூறிய அவர், சம்பந்தப்பட்ட இடத்தை துப்புரவு செய்யும் பணியை செலாயாங் நகராண்மைக் கழகம் மேற்கொண்டது என்றார்.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த லுவாஸ் மற்றும் செலாயாங் நகராண்மைக் கழக அதிகாரிகள் அந்த பெயர் பொறிக்கப் படாதக் கலன்களைக் கண்டனர்.
சம்பந்தப்பட்ட அந்த வடிகால் நீர் சுங்கை காஸி ஆற்றின் வழியாக சுங்கை பூலோ ஆற்றில் கலப்பது லுவாஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது. அது சுத்திகரிப்பு மையத்திற்கான நீரோட்டப் பகுதியில் அமைந்திருக்கவில்லை என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது என்று ஜமாலியா சொன்னார்.
இந்த விவகாரத்தை லுவாஸ் சுற்றுச்சூழல் இலாகா, பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட், தேசிய நீர் சேவை ஆணையம் ஆகிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


