அலோர் ஸ்டார், செப் 26 - கெடா மாநிலத்தில் வெள்ள நிலைமை
படிப்படியாக சீரடைந்து வருகிறது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி
அம்மாநிலத்தில் 593 குடும்பங்களைச் சேர்ந்த 1,885 பேர் துயர் துடைப்பு
மையங்களில் தங்கியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 736
குடும்பங்களைச் சேர்ந்த 2,366 பேராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாநிலத்திலுள்ள பெண்டாங், கோத்தா ஸ்டார், பொக்கோ செனா ஆகிய
மூன்று மாவட்டங்களில் உள்ள 18 துயர் துடைப்பு மையங்களில் அவர்கள்
தங்க வைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையின் பேரிடர் தகவல்
அறிக்கை கூறியது.
பெண்டாங் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 365 குடும்பங்களைச்
சேர்ந்த 1,216 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ள
வேளையில் கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் 203 குடும்பங்களைச் சேர்ந்த
605 பேரும் பொக்கோ செனா மாவட்டத்தில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 64
பேரும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
நேற்று வரை 4,769 குடும்பத்தினர் துயர் துடைப்பு மையங்களிலிருந்து
வெளியேறியுள்ளனர்.


