கோலாலம்பூர், செப். 25- இருபத்தாறு குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் நபர் ஒருவர் போலீசாருடன் நிகழ்நத துப்பாக்கிச் சூட்டில் பலியானார். வீடு புகுந்து கொள்ளையிடும் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் அவ்வாடரை தடுத்து நிறுத்த போலீசார் முயன்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இன்று விடியற்காலை 3.00 மணியளவில் நிசான் கிராண்ட் லிவினா காரில் சென்று கொண்டிருந்த அந்த 37 வயது நபரை கோத்தா டாமன்சாரா போலீஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவு உறுப்பினர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
பண்டார் பாரு குண்டாங், ஜாலான் கேபிகே 4 பகுதியை அடைந்த போது சந்தேகப் பேர்வழியின் காரை போலீசார் சுற்றி வளைத்தனர். தப்பும் முயற்சியாக காரை பின்னோக்கிச் செலுத்திய அந்த ஆடவர் அங்கிருந்த போலீஸ் காரை மோதித் தள்ளினார்.
இதனைத் தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு அக்காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை விட்டு விலகியது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த சந்தேக நபர் உயிரிழந்தார். அவரின் உடல் பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. என்று பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஆடவருக்கு சிலாங்கூர், ஜோகூர் மற்றும் கோலாலம்பூரில் குற்றச் செயல் தொடர்பில் 17 குற்றப்பதிவுகளும் போதைப் பொருள் தொடர்பில் ஒன்பது பதிவுகளும் உள்ளது தொடக்க கட்ட விசாணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேகப் பேர்வழியின் காரை சோதனையிட்ட போலீசார் அதிலிருந்து கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், மூன்று பாராங் கத்திகள், ஒரு கோடரி, இருப்பு வெட்டும் கருவி உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றினர்.








