குவாந்தான், செப் 24: புக்கிட் அமான் காவல்துறை அதிகாரியாக வேஷமிட்ட மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட முதியவர் 184,000 ரிங்கிட்டை இழந்தார்.
அந்த 75 வயது முதியவருக்கு சந்தேக நபரிடமிருந்து செப்டம்பர் 8ஆம் தேதி தொலைபேசி அழைப்பு வந்தது. அந்நபர் ஓய்வூதியதாரரின் கணக்கு எண் பணமோசடி நடவடிக்கைகளுக்காக தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறியதாகப் பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹ்யா ஓத்மான் தெரிவித்தார்.
சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு புதிய வங்கிக் கணக்கைத் திறக்குமாறு அறிவுறுத்தியதாகவும், வங்கி நெகாராவின் சோதனைக்காக அனைத்துப் பணத்தையும் அந்தக் புதிய கணக்கிற்கு மாற்றுமாறு கூறியதாகவும் யாஹாயா கூறினார்.
"பாதிக்கப்பட்டவர் RM184,000 பரிமாற்றம் செய்துள்ளார். மேலும், வங்கித் தகவல்களையும் சந்தேக நபருக்கு வழங்கியுள்ளார். மறுஆய்வு முடிந்ததும் பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது.
``அதற்கு பின் சந்தேக நபரிடமிருந்து எந்த அழைப்பும் வராததைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து முதியவர் குவாந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவரின் சேமிப்பு பறிபோனது" என்று யாஹாயா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பொதுமக்கள் அறியாத நபர்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், மோசடிக்கு ஆளாகாமல் இருக்க காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
– பெர்னாமா


