NATIONAL

பலாக்கோங் தொகுதியில் தீபாவளி  பற்றுச் சீட்டு களுக்கு 450 பேர் விண்ணப்பம்- சட்டமன்ற உறுப்பினர் தகவல்

24 செப்டெம்பர் 2024, 8:22 AM
பலாக்கோங் தொகுதியில் தீபாவளி  பற்றுச் சீட்டு களுக்கு 450 பேர் விண்ணப்பம்- சட்டமன்ற உறுப்பினர் தகவல்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், செப் 24 - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் பெருநாள் கால ஜோம் ஷோப்பிங் இலவசப் பற்றுச் சீட்டுகளுக்கு பலாக்கோங் தொகுதி 450 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

இவ்வாண்டு இத்தொகுதிக்கு தலா 200 வெள்ளி மதிப்புள்ள 400 பற்றுச்சீட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில்  அதை விட அதிகமான விண்ணப்பங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகப் பலாக்கோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய் கூறினார்.

இந்த பற்றுச் சீட்டு திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கு இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கி  22ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் காலக்கெடு வை தாண்டியும் இன்னும் விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனினும், அவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும்  நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த பற்றுச் சீட்டு திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த நிபந்தனைகளில் மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்டவர்களாகவும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் உதவித் திட்டம் மற்றும் எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் ஆகியவற்றின் வாயிலாகப் பயன் பெறாதவர்களாகவும் இருப்பது அவசியம்  என்றார் அவர்.

இந்த பற்றுச் சீட்டுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்கும் தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றம் அவர் சொன்னார்.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப் படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலத்தின் 56 தொகுதிகளில் உள்ள வசதி குறைந்தவர்களுக்கு வழங்குவதற்காக 44 லட்சம் வெள்ளி மதிப்பிலான 22,000 பற்றுச் சீட்டுகளை மாநில அரசு ஒதுக்கியுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு அண்மையில் கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.