NATIONAL

சனிக்கிழமை மக்கோத்தா இடைத் தேர்தல் - தவறாது வாக்களிக்க வாக்காளர்களுக்கு எஸ்.பி.ஆர். வேண்டுகோள்

24 செப்டெம்பர் 2024, 7:05 AM
சனிக்கிழமை மக்கோத்தா இடைத் தேர்தல் - தவறாது வாக்களிக்க வாக்காளர்களுக்கு எஸ்.பி.ஆர். வேண்டுகோள்

குளுவாங், செப். 24- எதிர்வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 28)

நடைபெறவிருக்கும் மக்கோத்தா தொகுதி இடைத் தேர்தலில் தவறாது

கலந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும்படி தொகுதி

வாக்காளர்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக

இருப்பதற்கு எதுவாக முடிந்த அளவு அனைவரும் வாக்களிக்க வருமாறு

தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருண் கூறினார்.

நெங்கிரி இடைத் தேர்தலில் (கிளந்தான் மாநிலத்தில் கடந்த மாதம்

நடைபெற்ற இடைத் தேர்தல்) எழுபது விழுக்காட்டு வாக்காளர்கள்

வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இந்த இடைத் தேர்தலிலும் அதிக

விழுக்காட்டு வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். முடிந்த வரை

அதிகப்பட்ச வாக்குப் பதிவு எங்களின் இலக்காக உள்ளது என்றார் அவர்.

இங்குள்ள மக்கோத்தா முகாமின் டேவான் மக்கோத்தாவில் இன்று

நடைபெறும் தொடக்கக் கட்ட வாக்களிப்பை பார்வையிட்டப் பின்னர்

செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்றைய தொடக்கக் கட்ட வாக்களிப்பு குறித்து கருத்துரைத்த அவர்,

காலை 10.00 மணி நிலவரப்படி 35.47 விழுக்காட்டு வாக்குகள்

பதிவாகியுள்ளதாகவும் 90 விழுக்காட்டு வாக்குப் பதிவு இலக்கை அடைய

முடியும் எனத் தாம் நம்புவதாகவும் சொன்னார்.

இன்றைய தொடக்கக் கட்ட வாக்களிப்பில் 4,510 இராணுவ வீரர்கள் மற்றும்

அவர்களின் துணைவியரும் 401 போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களின்

துணைவியர்களும் வாக்களிக்கின்றனர். மக்கோத்தா தொகுதியில் மொத்தம்

66,318 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் சைட் ஹூசேன் சைட்

அப்துல்லாவுக்கும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் முகமது

ஹைசான் ஜாபருக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஷரிபா அஜிசா சைட் ஜைன்

(வயது 63) கடந்த ஆகஸ்டு மாதம் 2ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து

இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.