பாலிக் பூலாவ், செப். 24 - தெலுக் கும்பாரில் உள்ள பட்டறை ஒன்றில்
ஊழியர்களைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகிக்கத்தின் பேரில் கணவன்-
மனைவி உள்ளிட்ட ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பட்டறையின் உரிமையாளர்
தெலுக் கும்பார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து
நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் தாமான் நெலாயானில் உள்ள
வீடொன்றிலிருந்து 23 முதல் 55 வயது வரையிலான அந்த ஐவரையும்
கைது செய்து அவர்களிடமிருந்து ஐந்து கைபேசிகளைக் கைப்பற்றியதாக
பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள்
ரிசால் ஜெனால் கூறினார்.
அந்த உரிமையாளரும் இரு ஊழியர்களும் பட்டறையில் இருந்த போது
அங்கு ஆறு பேர் வந்ததாகவும் அவர்களில் ஒருவர் ஊழியர்களை
அறைந்ததோடு இரும்பினால் தாக்கியதாகவும் அந்த புகாரில்
கூறப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த தாக்குதலில் அந்த ஊழியர்களுக்கு தலை, புருவம், முதுகு உள்ளிட்ட
இடங்களில் காயம் ஏற்பட்டது. பழுதுபார்ப்பதற்காக சந்தேக நபர் விட்டுச்
சென்ற மோட்டார் சைக்கிள் தயாராகிவிட்டது என்றத் தகவலைத்
தெரிவிப்பதற்காக அந்த பட்டறை ஊழியர் ஒருவர் அடிக்கடி அவரது
வீட்டிற்கு சென்றது இந்த தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது
என்று கமாருள் தெரிவித்தார்.
தாக்குதலைத் தடுத்து நிறுத்தி சாமாதானப்படுத்த முயன்ற பட்டறையின்
உரிமையாளருக்கும் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறிய அவர்,
பட்டறை உரிமையாளரின் வெள்ளி கைவளையம் மற்றும் ஊழியரின்
தங்கச் சங்கிலி ஆகியவற்றையும் அக்கும்பல் பறித்துச் சென்றது என்றார்.
குற்றவியல் சட்டத்தின் 394வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வற்கு
ஏதுவாக கைதான ஐவரும் வரும் வெள்ளிக்கிழமை வரை தடுப்புக்
காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.


