கோலாலம்பூர், செப். 24 - இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள அனுரகுமார திசநாயகாவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு மலேசிய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்தல் வெற்றிக்காக அதிபர் அனுர குமார திசநாயகா மற்றும் இலங்கைக்கு வாழ்த்துகள். விரைவில் இலங்கையுடனான நட்புறவைப் புதுப்பித்து நமது மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் அரசியல்வாதியும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவருமான திசநாயகா கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவர் நேற்று காலை கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
சமூக நீதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை 55 வயதான இந்த அரசியல்வாதியின் வெற்றி பிரதிபலிக்கிறது.


