கோத்தா பாரு, செப். 24- கட்டுப்பாட்டை இழந்த லோரி மூன்று மோட்டார்
சைக்கிள்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர இயக்க வாகனத்தை மோதியதில்
ஒருவர் உயிரிழந்தார்.
குபாங் கிரியான், லிம்பாட் சாலை சமிக்ஞை விளக்கு பகுதியில் நேற்று
பிற்பகல் 12.50 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பில் போதைப்
பித்தர் என சந்தேகிக்கப்படும் லோரி ஓட்டுனரை போலீசார் கைது
செய்துள்ளனர்.
பெரிங்காட்டிலிருந்து பாசீர் தும்போ நோக்கிச் சென்று கொண்டிருந்த
ஹினோ ரக லோரி அந்த சாலை சமிக்ஞை விளக்கு பகுதியில்
கட்டுப்பாட்டை இழந்து இதர நான்கு வாகனங்கள மோதியதாகக் கோத்தா
பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ரோஸ்டி டாவுட்
கூறினார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கடுமையான காயங்கள்
காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் நேற்றிரவு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஐம்பது வயதான அந்த லோரி ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட சிறுநீர்
சோதனையில் அவர் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளை
உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது என்றார் அவர்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 44(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருவதாக அவர் மேலும் கூறினார்.


