NATIONAL

யு.பி.எஸ்.ஆர். மற்றும் பி.டி.3 தேர்வு ரத்து நிரந்தரமானது - அமைச்சர் ஃபாட்லினா கூறுகிறார்

23 செப்டெம்பர் 2024, 9:50 AM
யு.பி.எஸ்.ஆர். மற்றும் பி.டி.3 தேர்வு ரத்து நிரந்தரமானது - அமைச்சர் ஃபாட்லினா கூறுகிறார்

புத்ராஜெயா, செப். 23- தொடக்கப் பள்ளி அடைவு நிலை மதிப்பீட்டு தேர்வு (யு.பி.எஸ்.ஆர்.) மற்றும் மூன்றாம் ஆண்டு மதிப்பீட்டு தேர்வு (பி.டி.3) ஆகியவற்றை மீண்டும் அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கும் விவகாரத்தை ஒரு கோணத்தில் மட்டும் அல்லாமல் விரிவான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என கல்வியமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இவ்விரு தேர்வுகளையும் அகற்றுவது தொடர்பில் ஏற்கனவே எடுத்த முடிவில் கல்வியமைச்சு தற்போதைக்கு உறுதியாக உள்ளது என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.

திடீரென தேர்வுகளை நடத்துவதற்கும் திடீரென நடத்தாமல் போவதற்கும் நமது பிள்ளைகள் ஒன்றும் பரிசோதனைச் சாலை எலிகள் அல்ல. நாம் முடிவை எடுக்க வேண்டும் என்பதோடு வகுப்பறை மதிப்பீட்டை உறுதிப்படுத்த நாம்  பல்வேறு சிறப்பு அறிக்கைகளை தயாரித்துள்ளோம். மேலும் அவர்களின் (மாணவர்கள்) முன்னேற்றத்தைப் பாதிக்கும் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம் என்று அவர் சொன்னார்.

கடந்த 2022ஆம் ஆண்டு அகற்றப்பட்ட அவ்விரு தேர்வுகளையும் கல்வியமைச்சு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கை தொடர்பில் அமைச்சர் இவ்வாறு கருத்துரைத்தார்.

இவ்விரு தேர்வுகளும் இல்லாத காரணத்தால் கல்வியை பாதியில் கைவிடும் எஸ்.பி.எம். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

20217 புதிய பள்ளி பாடத் திட்ட அணுகுறை மீது அமைச்சு தற்போது தீவிர கவனம் செலுத்தி வரும் அதே வேளையில் 2026 தொடங்கி பத்தாண்டுகளுக்கான நாட்டின் கல்வி இலக்கை நிர்ணயிப்பதற்காக புதிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை வரைந்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, எஸ்.பி.எம். மாணவர்கள் மத்தியில் காணப்படும் கல்வியைப் பாதியில் கைவிடும் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் பல்வேறு ஆக்ககரமான நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுத்து வருவதாகக் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.