கங்கார், செப். 23 - முன்னாள் மோட்டோ3 மற்றும் கப் பிரிக்ஸ் தேசிய மோட்டார் சைக்கிள பந்தய வீரர் எல்லி இட்லியானிசர் இலியாஸை இரு வாரங்களுக்கு முன் கொலை செய்ததாகக் குத்தகையாளர் ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
இம்மாதம் 10ஆம் தேதி இரவு 10.30 மணிக்கும் மறுநாள் (செப்டம்பர் 11) அதிகாலை 12.01 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தாமான் பெஹோர் கோன்சார் ஜெயா சாலை சந்திப்பில் 40 வயதான எல்லி இட்ஜ்லியானிசரைக் கொலை செய்ததாக 51 வயதான இப்ராஹிம் ஜோஹன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் 302வது கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் வழங்க இச்சட்டப் பிரிவு வகை செய்கிறது.
மாஜிஸ்திரேட் அனா ரோசானா முகமது நோர் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக இப்ராஹிம் தலையசைத்தார். எனினும் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
இப்ராஹிமிற்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக நீதிமன்றம் இந்த வழக்கை டிசம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
அரசுத் தரப்பில் வழக்குரைஞர் நபிலா அகமது போட் இந்த வழக்கை நடத்தும் வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் டான் யென் சிங் ஆஜரானார்.


