புத்ராஜெயா, செப். 23- இம்மாதம் 8 முதல் 14 வரையிலான 37வது நோய்த்
தொற்று வாரத்தில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 1,794ஆக
குறைந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 1,870 பேராக
இருந்தது.
டிங்கி காய்ச்சல் தொடர்புடைய மரணச் சம்பவம் எதுவும் கடந்த வாரம்
பதிவாகவில்லை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ
டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான் கூறினார்.
நாட்டில் 37வது நோய்த் தொற்று வாரம் வரை பதிவான மொத்த டிங்கி
காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 100,236ஆகும் எனக் கூறிய அவர்,
கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 84,865ஆக
இருந்தது என்றார்.
இவ்வண்டின் முதல் 37 மாதங்களில் டிங்கி காய்ச்சலால்
மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89 பேராக இருந்த வேளையில்
கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 59ஆகப் பதிவாகியிருந்தது என்று அவர்
சொன்னார்.
36வது நோய்த் தொற்று வாரத்தில் 53ஆக நோய்ப் பரவல் இடங்களின்
எண்ணிக்கை கடந்த வாரம் 43ஆக குறைந்த து என்றும் அவர் கூறினார்.
நோய்த் தொற்று பரவல் அதிகம் உள்ளவை என அடையாளம் காணப்பட்ட
அந்த 43 இடங்களில் 32 இடங்கள் சிலாங்கூரில் உள்ளன. கோலாலம்பூர்,
புத்ராஜெயா, மற்றும் பேராக்கில் தலா மூன்று இடங்களும் நெகிரி
செம்பிலான் மற்றும் பினாங்கில் தலா மூன்று இடங்களும் கிளந்தானில்
ஒரு இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார் அவர்.
சிக்குன்குன்யா நோயைப் பொறுத்த வரை 37வது நோய்த் தொற்று
வாரத்தில் புதிய சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை என்றும்
இவ்வாண்டில் இதுரை இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
72 பேராக இருந்து வருவதாகவும் டாக்டர் முகமது ராட்ஸி குறிப்பிட்டார்.


