ஈப்போ, செப். 23 - தைப்பிங்கில் பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்ததற்கு அவருக்கு ஏற்பட்ட உடல் நலக் கோளாறு காரணமே தவிர சமூக ஊடங்களில் பகிரப்பட்டது போல் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதால் அல்ல என காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
“வழிப்பறி கொள்ளைக்கு ஆளான பெட்ரோல் நிலைய ஊழியர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்“ என்ற தலைப்பில் சமூக ஊடங்களில் பகிரப்பட்ட படம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை தங்கள் கவனத்திற்கு வந்ததாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது நாசீர் இஸ்மாயில் கூறினார்.
சிம்பாங், இரண்டரை மைலில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் பணிபுரியும் அப்பெண் உடல் நலக் கோளாறு காரணமாக மயங்கி விழுந்தது தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் சொன்னார்.
தரையில் விழுந்த காரணத்தினால் அப்பெண்ணுக்கு தலையில் காயம் உண்டாகி இரத்தக் கசிவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் என்று அவர் அறிக்கை குறிப்பிட்டார்.
மக்களிடையே அச்சத்தையும் பொது அமைதிக்கு குந்தகத்தையும் நல்லிணக்கத்திற்கு பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய வகையில யூக அடிப்டையிலான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
தவறான தகவல்களைப் பரப்புவது தண்டனைச் சட்டத்தின் 500வது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தகவல் மற்றும் பல்லுடக சட்டத்தின் 233 வது பிரிவின் கீழ் குற்றமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.


