கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி மேற்கொள்ளப்பட அச்சோதனையில் 500,800 வெள்ளை சிகரெட்டுகள் அடங்கிய 84 பெட்டிகள் மற்றும் பழைய செய்தித்தாள்கள் நிரப்பப்பட்ட 63 பெட்டிகள் நான்கு வணிகப் பேலட்டுகளில் வைக்கப்பட்டுள்ளதை தாங்கள் கண்டுபிடித்ததாக சுங்கத் துறையின் மத்திய மண்டல அமலாக்க நடவடிக்கை இயக்குனர் சுல்கிப்லி முகமமது கூறினார்.
அந்த வெள்ளை சிகரெட்டுகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் தீர்வையற்ற வர்த்தக மண்டலத்தின் வழியாக முறையான அனுமதியின்றி நுழைந்தது விரிவான விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 'உடைகள் & ஜீன்ஸ்' என அறிவிக்கப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு 50,080 வெள்ளியாகும். வரியுடன் சேர்த்தால் அதன் மதிப்பு 335,536 வெள்ளியை எட்டும். வெள்ளை நிற சிகரெட்டுகளில் மலேசியாவுக்குள் நுழைந்தவுடன் சுங்க வரி செலுத்த பட்டதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி விமான நிலையத்தின் தீர்வையற்ற வர்த்தக மண்டலத்தில் உள்ள சரக்கு முனையத்தில் நடத்தப்பட்ட தினசரி ஆய்வில் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாக நம்பப்படும் 618,800 வெள்ளி மதிப்புள்ள 804,000 வெள்ளை சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.


