NATIONAL

செந்தோசா தொகுதியின் சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரம் பாடல் திறன் போட்டி- வெ.15,000 பரிசுகளை வெல்ல வாய்ப்பு

20 செப்டெம்பர் 2024, 6:58 AM
செந்தோசா தொகுதியின் சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரம் பாடல் திறன் போட்டி- வெ.15,000 பரிசுகளை வெல்ல வாய்ப்பு

(ஆர்.ராஜா)

கிள்ளான், செப். 20 - செந்தோசா சட்டமன்றத் தொகுதி சிலாங்கூர் சிறுவர்

நட்சத்திரம் பாடல் திறன் போட்டியை மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு

செய்துள்ளது. சுமார் 15,000 வெள்ளி மதிப்பிலான ரொக்கப் பரிசுகளை

வெல்வதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இப்போட்டியின் இறுதிச் சுற்று

புக்கிட் ஜாலில் அரங்கில் வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி

நடைபெறவுள்ளது.

பத்து போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இந்த இறுதிச் சுற்று நிகழ்வில்

சிறப்பு பிரமுகராக கலந்து கொள்ள மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ

அமிருடின் ஷாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செந்தோசா தொகுதி

சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இப்போட்டியில் கலந்து கொள்ள இதுவரை 60 பேர் பதிவு செய்துள்ளதாகக்

கூறிய அவர், இப்போட்டிக்கு சிலாங்கூரிலிருந்து மட்டுமின்றி வெளி

மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்வதால்

பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை 170 பேரை எட்டும் எனத் தாங்கள்

எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

வயது 9 முதல் 16 வயது வரையிலான சிறார்களை இலக்காக கொண்ட இப்போட்டியில்

நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்துவர் என

நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தொகுதி அலுவலகத்தில் இன்று

நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இளையோர் மத்தியில் மறைந்துள்ள கலைத் திறனை வெளிப்படுத்துவதையும் அவர்களுக்கு தன்னக்கையையும் தைரியத்தையும் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இப்போட்டியை நாங்கள் நடத்தி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

தமிழ் கலைஞர்கள் மன்றம், கிள்ளான் விண்வெளி கலை மன்றம், சிலாங்கூர் பாரம்பரிய இசை வாத்திய சங்கம் ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த போட்டியில் முதல் பரிசாக 2,000 வெள்ளியும் இரண்டாம் பரிசாக 1,500 வெள்ளியும் மூன்றாம் பரிசாக 1,000 வெள்ளியும் ஆறுதல் பரிசாக 500 வெள்ளியும் வழங்கப்படும்.

இந்த போட்டியில் பங்கேற்பதற்கான இறுதி நாள் செப்டம்பர் 29ஆம்

தேதியாகும். இதன் தொடக்கச் சுற்றுகள் எதிர்வரும் அக்டோபர் 5 மற்றும் 6ஆம்

தேதிகளில் நடைபெறவுள்ள வேளையில் அரையிறுதிப் போட்டி அக்டோபர்

12ஆம் தேதி நடைபெறும். இறுதிப் போட்டி புக்கிட் ஜாலில் தேசிய

விளையாட்டரங்களில் எதிர்வரும் அக்டோபர் 27ஆம் தேதி வெகு சிறப்பாக

நடத்தப்படும் என்றார் அவர்.

இந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 10 பேர் தேர்தெடுக்கப்படுவர் எனக் கூறிய அவர்,

இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோரை போட்டிக்கு தயார் படுத்தும் வகையில்

ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கலைஞர் வழிகாட்டியாக நியமிக்கப்படுவார் என்றார்.

கடந்தாண்டு நடைபெற்ற போட்டியில் பங்கு கொணடு வெற்றி பெற்ற

இளம் கலைஞர்கள் தமிழகத் தொலைக்காட்சிகளில் தோன்றி தங்களின்

திறனை வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றதாகவும் அவர்

குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.