நிபோங் திபால், செப் 20: சிம்பாங் அம்பாட்டில் லாரிகளின் பாகங்களை திருடிய சந்தேகத்தின் பேரில் 46 குற்றப் பதிவுகள் கொண்ட ஒரு வேலையில்லாத நபரை செபராங் பிராய் சிலாந்தான் மாவட்ட காவல்துறை (எஸ்பிஎஸ்) கைது செய்தது.
குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியின் பாகங்கள் திருடப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அச் சந்தேக நபர் (47) கடந்த புதன்கிழமை ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார் என SPS மாவட்ட காவல் துறைத் தலைவர் சுப்ரிட்டேன் சோங் பூ கிம் கூறினார்.
"சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ள இரண்டு நண்பர்களுடன் அந்த குற்றத்தை பரிந்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று சோங் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்தச் சோதனையில், புக்கிட் தெங்காவில் திருடப் பட்டதாகக் கூறப்படும் ஒரு வேனையும் காவல்துறையினர் கைப்பற்றியதாக சோங் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 379A பிரிவின் கீழ் விசாரணைக்காக சந்தேகநபர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
- பெர்னாமா


