NATIONAL

பதிவுக் கட்டணப் பிரச்சனையால் பி40 மாணவர்கள் கல்வியை கைவிட மாட்டார்கள் - உயர்கல்வி அமைச்சகம் உறுதி

20 செப்டெம்பர் 2024, 2:27 AM
பதிவுக் கட்டணப் பிரச்சனையால் பி40 மாணவர்கள் கல்வியை கைவிட மாட்டார்கள் - உயர்கல்வி அமைச்சகம் உறுதி

புத்ராஜெயா, செப் 20: உயர்கல்வி பெறுவதற்கு  கல்வி கட்டணங்கள் தடையாக இருக்கலாகாது என உயர்கல்வி அமைச்சகம் கூறுகிறது. இந்நாட்டில் கல்வி கற்கும் வாய்ப்பை, கல்வி கூட பதிவுக் கட்டணப் பிரச்சனைகள் பாதிக்க கூடாது. குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெற அது தடையாக இருப்பதை காண  அரசாங்கம் விரும்பவில்லை  என அமைச்சர் கூறினார்.

பொது உயர்கல்வி நிறுவனங்களில் (IPTA) எதிர்வரும் அக்டோபரில் பதிவு செய்யும் மாணவர்களை முதலில் ஏற்குமாறு உயர்கல்வி அமைச்சகம் தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தை (PTPTN) கேட்டுக் கொண்டுள்ளதாகவும், கட்டணம் தொடர்பான பிரச்சனைகள் பின்னர் தீர்க்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் தெரிவித்தார்.

"இது உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிரின் முன்மொழிவு ஆகும். இதன் சாராம்சம் என்னவென்றால், எந்த ஒரு குழுவும், குறிப்பாக பி40 தரப்பினர் கட்டண பிரச்சனையால் நம் நாட்டில் கல்விக்கான அணுகலை கைவிடுவதை காண நாங்கள் விரும்பவில்லை.," என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

குறிப்பாக நிதிப் பிரச்சனைகளை எதிர் கொள்பவர்களுக்கு மாணவர் பதிவு நடவடிக்கை எளிதாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்தபா தெரிவித்தார்.

தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்திடம் (PTPTN) நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்குப் பொது உயர்கல்வி நிறுவனங்களில் மற்றும் பாலிடெக்னிக்கில் பதிவு செய்வதற்கு முன் RM1,500 முன்பணம் (WPP) வழங்கப்படுகிறது.

பல மாணவர்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம்.எனவே, தெரியாதவர்கள் அல்லது பதிவு செய்வதில் சிக்கல் உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம்.மாணவர்கள் முதலில் பதிவு செய்து கொள்ளலாம், கட்டணம் தொடர்பான விஷயங்கள் பின்னர் கவனிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

"பல்கலைக்கழகங்கள் இந்த விஷயத்தை அறிந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் பதிவு சிக்கல்களால் எந்த மாணவரும் கல்வியை கைவிடாமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்வோம். இந்த பிரச்சனை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.