ஷா ஆலம், செப். 20 - மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றச் சிறுவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் சமூக நல இல்லங்கள் தொடர்பான வழிகாட்டியை தரம் உயர்த்தும் நோக்கில் சிறப்புச் செயற்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மே ஸி தலைமையிலான அந்த செயற்குழுவில் ஊராட்சி மன்றங்கள், மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு (யுபென்) மற்றும் சமூக நலத் துறையின் சட்டப் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர் என்று சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.
ஊராட்சி மன்றங்களின் கீழ் பராமரிப்புச் சேவை துணைச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பான பரிந்துரையையும் அந்த செயற்குழு பரிசீலிக்கும் என்று அவர் சொன்னார்.
இதற்கு முன்னர் பாலர் பள்ளி நிலையிலான ஆய்வுகளில் மட்டுமே இந்த செயற்குழு கவனம் செலுத்தி வந்தது. எனினும், இதர சமூக நல இல்லங்களுக்கும் இதனை விரிவுபடுத்த வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். நிதிப் பிரச்சனை மற்றும் சமூக நல இல்லங்களை அமைப்பது தொடர்பான தொழில்நுட்ப விவகாரங்களுக்கும் தீர்வினை ஏற்படுத்தும் மையமாக இந்த செயற்குழு விளங்கும் என அவர் தெரிவித்தார்.
சமூக நல இல்லங்களில் குறைந்தது நான்கு பேர் பராமரிப்பில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அமல்படுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு சட்டத்தை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சமூக நல இல்லங்கள் தொடர்பான வழிகாட்டியை மாநில அரசு தரம் உயர்த்தவுள்ளது. இந்த செயல்குழுவின் முதல் கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வேளையில் அடுத்தக் கூட்டம் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது என்றார் அவர்.


