புத்ராஜெயா, செப். 19 - இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மரங்கள் விழுந்தது
தொடர்பில் 2,575 அவசர அழைப்புகளை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கையைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிலாங்கூர் முதலிடம் வகிக்கிறது.
அக்காலக்கட்டத்தில் சிலாங்கூரில் 441 மரம் விழுந்த சம்பவங்கள் பதிவான வேளையில் அதனைத் தொடர்ந்து பேராக்கில் 321 சம்பவங்களும் சரவாக்கில் 264 சம்பவங்களும் பதிவானதாக அத்துறை தெரிவித்தது.
இந்த சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும் 27 பேர் காயமடைந்த வேளையில் மேலும் 37 பேர் காயமின்றி மீட்கப்பட்டதாக அத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையின் போது பொதுமக்கள், குறிப்பாக சாலையைப் பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு தீயணைப்புத் துறை அறிவுறுத்தியது
ஓட்டுனர்கள் தங்கள் சுற்றுப்புறங்கள் மீது குறிப்பாக பெரிய அல்லது பழைய மரங்கள் இருபுறமும் உள்ள சாலைகளில் பயணிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தால் பீதியடைய வேண்டாம். வாகன இயந்திரத்தை நிறுத்தி விட்டு பொதுமக்களின் உதவியை நாடவும் அல்லது உதவிக்கு 999 என்ற அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிக்கை கூறியது.


