புத்ராஜெயா, செப். 18 - குளோபல் இக்வான் சர்வீஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங் என்ற தொண்டு நிறுவனத்திற்கு எதிராக அரச மலேசிய போலீஸ்படை (பி.டி.ஆர்.எம்.) நடத்தி வரும் விசாரணையில் ஊழல் நடந்ததற்கான ஆதாரம் எதனையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கண்டறியவில்லை.
எம்.ஏ.சி.சி.யின் தலையீடு இல்லாமல் காவல்துறை தனது விசாரணையைத் தொடரும் என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
இங்கு எந்த ஊழல் பிரச்சனையையும் காணாததால் விசாரணையை நான் காவல்துறையிடம் விட்டுவிடுகிறேன். போலீசார் தங்கள் விசாரணையை தொடர்வார்கள் என இன்று இங்கு நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
பணமோசடி தொடர்பாகவும் குளோபல் இக்வான் நிறுவனம் விசாரிக்கப்படுமா என நிருபர்கள் எழுப்பியக் கேள்விக்கு அஸாம் இவ்வாறு பதிலளித்தார்.
ஒப் குளோபல் அதிரடிச் சோதனையை கடந்த புதன்கிழமை தொடக்கிய காவல்துறை, அந்த அமைப்புடன் தொடர்புடைய சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள 20 முகாம்களிலிருந்து 402 சிறார்களை மீட்டது.
சமயத்தின் பெயரால் சிறார்களை சுய லாபத்திற்காகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு எதிரான விசாரணையை எளிதாக்கும் நோக்கில் இந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


