(ஆர்.ராஜா)
ஷா ஆலம், செப். 18 - பெருநாள் கால ஷோம் ஷோப்பிங திட்டத்தின் கீழ்
தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு புக்கிட் மெலாவத்தி தொகுதிக்கு 400
பற்றுச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காகக் கொண்ட இந்த
பற்றுச் சீட்டுத் திட்டத்திற்கு இன்று செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி
இம்மாதம் 23ஆம் தேதி வரை தொகுதி மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று
புக்கிட் மெலாவத்தி தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்பிரமணியம்
கூறினார்.
மாநில அரசின் உதவித் திட்டங்களான எஸ்.எம்.யு.இ., எஸ்.எம்.ஐ.எஸ்.
மற்றும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டத்தில் பங்கு
பெறும் தொகுதி மக்கள் இந்த பற்றுச்சீட்டுத் திட்டத்தில் வாய்ப்பு
வழங்கப்படாது என்று அவர் சொன்னார்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு பற்றுச் சீட்டு மட்டுமே வழங்கப்படும் எனக்
கூறிய அவர், குடும்ப வருமானம் மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாகவும்
திருமணமாகாதோருக்கான வருமானம் மாதம் 2,000 வெள்ளிக்கும்
குறைவாகவும் இருக்கும் அதே வேளையில் அவர்கள் தொகுதி
வாக்காளர்களாகவும் இருப்பது அவசியம் என அவர் கூறினார்.
இந்த பற்றுச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்வோர் கணவர் மற்றும்
மனைவியின் அடையாளக் கார்டு, சம்பள விபர அறிக்கை, வங்கியின்
கணக்கறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை உடன் கொண்டு வர வேண்டும்
என அவர் குறிப்பிட்டார்
இந்த பற்றுச் சீட்டு வழங்குவதில் உண்மையில் ஏழ்மை நிலையில்
உள்ளவர்களுக்கும் இதற்கு முன்பு இந்த பற்றுச் சீட்டுகளைப் பெறாதவர்களுக்கும் இம்முறை முன்னுரிமை அளிக்கப்படும் என்று தீபன் தெரிவித்தார்.
இந்த பற்றுச் சீட்டுத் திட்டம் குறித்து பெரும்பாலோர்
அறிந்திருக்கவில்லை. ஆகவே, வசதி குறைந்தவர்களைக் காட்டிலும்
வளமாக இருப்பவர்களே அதிகமாகவும் தொடர்ந்தும் பயன் பெற்று
வருகின்றனர்.
ஆகவே, கடந்தாண்டு இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்களுக்கு இந்த
முறை வழங்குவதில்லை என நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.
நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும்
தோட்டப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு இம்முறை முன்னுரிமை
அளிக்கப்படும் என்றார் அவர்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளியை முன்னிட்டு 44 லட்சம் வெள்ளி செலவில் 22,000 இலவச
பற்றுச் சீட்டுகளை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 56
தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வசதி குறைந்தவர்களுக்கு இந்த பற்றுச்
சீட்டுகள் வழங்கப்படும்.


