புத்ராஜெயா, செப். 18 - பெண்மணி ஒருவருக்கு எதிராகக் குற்றத்
தன்மையிலான அச்சுறுத்தலை விடுத்ததாகக் குளோபல் இக்வான்
செர்விசஸ் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் உறுப்பினரும் வணிகருமான
ஆடவர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் அகமது அஃபிக் ஹசான் முன்னிலையில் தமக்கு எதிராக
வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை 39 வயதான முகமது ரிஸா மக்கார் மறுத்து
விசாரணை கோரினார்.
இம்மாதம் 9ஆம் தேதி இரவு 10.00 மணியளவில் இங்குள்ள பிரிசிண்ட் 4,
கார் நிறுத்துமிடத்தில் 25 வயது பெண்ணுக்கு எதிராக அச்சுறுத்தும்
பாணியில் மிரட்டல் விடுத்ததாக அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
மூன்று மனைவிகளையும் பத்து பிள்ளைகளையும் கொண்ட அந்த ஆடவர்
“நாங்கள் காத்திருக்கிறோம். உனது வீடு, கணவர் மற்றும் குடும்பம் பற்றிய
தகவல்கள் எங்களுக்குத் தெரியும்“ என்று அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.
ஏற்கனவே செய்த போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ள நிர்பந்திக்கும்
நோக்கில் குளோபல் இக்வான் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினரான
அப்பெண்ணுக்கு எதிராக இவ்வாறான அச்சுறுத்தல் வார்த்தைகளை அவர்
பிரயோகித்ததாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை
அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும்
குற்றவியல் சட்டத்தின் 506வது பிரிவின் கீழ் அவர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் முகமது சப்ரி ஓத்மான்
வழக்கை நடத்தும் வேளையில் முகமது சப்ரியைப் பிரதிநிதித்து
வழக்கறிஞர் ஜூல்கிப்ளி உலுல் அஸ்மின் ஆஜராகினார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10,000 வெள்ளி
ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட், இந்த வழக்கின்
மறு விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்தி
வைத்தார்.


