குவாந்தான், செப். 18 - இங்குள்ள செசேரா, பந்தாய் பாலோக்கில் உள்ள
பொழுதுபோக்கு முகாம் பகுதியில் தங்கியிருந்தவர்களின் கூடாரம் மீது
மரம் விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு அவரின் பேத்தி
காயங்களுக்குள்ளானார்.
திரங்கானு மாநிலத்தின் கெமமமான் நகரைச் சேர்ந்த சே ஜக்காரியா சே
அலி (வயது 68) என்ற அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து
விட்டதாக குவாந்தன் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமது
ஜஹாரி வான் பூசு கூறினார்.
இந்த சம்பவத்தில் தலையில் காயங்களுக்குள்ளான நுருள் அம்னி அஷியா
முகமது அகிப் (வயது 7) என்றச் சிறுமி குவாந்தான் துங்கு அம்புவான்
அப்சான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பலியான நபரின் 13 குடும்ப உறுப்பினர்கள் அந்த பொழுது
போக்கு முகாம் பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கி மூன்று நாட்கள்
முகாமிட்டு தங்கியிருந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
நேற்று மாலை 3.10 மணியளவில் அந்த கூடாரத்தின் வெளியே உள்ள
நாற்காலியில் அந்த முதியவர் அமர்ந்திருந்த போது பலத்த காற்று வீசத்
தொடங்கியது. அச்சமயம் கூடாரத்தின் உள்ளே இருந்த அந்த முதியவரின்
மருமகனும் அவரின் மனைவியும் மரம் முறிந்து விழும் பலத்த சத்தம்
கேட்டு வெளியே வந்தனர்.
அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்ப முயன்ற வேளையில்
அம்முதியவர் மரத்தின் அடியில் சிக்கிக் கொண்டார். பின்னர் அங்கிருந்த
அனைவரும் அவரை மீட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த அந்த முதியவரின் உடல்
சவப்பரிசோதனைக்காகக் குவாந்தான் சுல்தான் ஹாஜி அகமது ஷா
மருத்துவ மையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டது.


