NATIONAL

ஊராட்சி மன்றங்களின் செயல்திறனை மதிப்பிடும் புதிய மதிப்பீட்டு முறை அடுத்தாண்டு அறிமுகம்

17 செப்டெம்பர் 2024, 2:38 AM
ஊராட்சி மன்றங்களின் செயல்திறனை மதிப்பிடும் புதிய மதிப்பீட்டு முறை அடுத்தாண்டு அறிமுகம்

பாப்பார், செப் 17- நாடு முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய அடுத்தாண்டு தொடங்கி “சமிக்ஞை விளக்கை“ அடிப்படையாகக் கொண்ட புதிய தர நிர்ணய முறையை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு அறிமுகம் செய்யவுள்ளது.

ஊராட்சி மன்றங்களின் சேவைத் தரத்தை உயர்த்தும்  நோக்கில் இந்த புதிய தர நிர்ணய முறை அமல் செய்யப்படுவதாக அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

மேலும் நிர்வாகத்தை வழி நடத்துவதில் ஊராட்சி மன்றங்கள் பொறுப்புணர்வுடனும் வெளிப்படையாகவும் நடந்து கொள்வதை உறுதி செய்வதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சேவை வழங்கும் நடைமுறையை மேம்படுத்துவதற்கான தெளிவான வரையறைகளை வழங்குவதன் மூலம் இந்த புதிய தர நிர்ணய முறை ஊராட்சி மன்றங்களின் செயல் திறனை மதிப்பீடு செய்யும் என்று அவர் சொன்னார்.

இந்த “சமிக்ஞை விளக்கு“ முறையின் கீழ் ஊராட்சி மன்றங்கள் சேவைத் திறன் அடிப்படையில் பச்சை விளக்கு, மஞ்சள்  விளக்கு மற்றும் சிவப்பு விளக்கு என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படும் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

உயர் தரத்திலான சேவையை வழங்கும் ஊராட்சி மன்றங்கள் பச்சை விளக்கைப் பெறும் தகுதியைப் பெறுவதோடு கூடுதல் மானியத்திற்கும்  தகுதி பெறும். மஞ்சள் விளக்கைப் பெறும் ஊராட்சி மன்றங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் வேளையில் அவை மறுஆய்வுக்கும் உட்படுத்தப்படும்.

அதே சமயம் சிவப்பு விளக்கைப் பெறும் ஊராட்சி மன்றங்களின் மானியம் ரத்து செய்யப்பட்டு நிதி விண்ணப்பங்களும் தள்ளுபடி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும், கே.பி.ஐ.எனப்படும் அடைவு நிலைக்கான முதன்மைக் குறியீட்டை ஊராட்சி மன்றங்கள் அடைய முடியாததற்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதிலும் அமைச்சு உதவி புரியும் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.