கோலாலம்பூர், செப். 15- ஹாங்காங் கொலிசியம், கவுலூனில் இன்று நடைபெற்ற ஹாங்காங் பொது பூப்பந்து வெற்றியாளர் பட்டத்தை வெல்வதற்கு நாட்டின் முன்னணி மகளிர் இரட்டையர்களான பெர்லி டான்-எம். தீனாவுக்கு 38 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டன.
உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள சீனாவின் லியு ஷெங் ஷு-டான் நிங் ஜோடியை 21-14, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்திய அந்த ஜோடிக்கு இந்த பருவத்தில் கிடைத்த முதல் இரட்டையர் பட்டம் இதுவாகும்.
உலகத் தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கும் பேர்லி-தீனா ஜோடி இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் மிகத் தீவிரமான ஆட்ட பாணியை வெளிப்படுத்தினர். இதனால் ஏற்பட்ட முட்டுக்கட்டை காரணமாக எதிரணியினர் பல எளிய தவறுகளைச் செய்தனர்.
இந்த வெற்றியானது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அகில உலக சம்மேளனத்தின் உலக பூப்பந்து சுற்றுப்பயணத்தில் தேசிய ஜோடி எதிர்நோக்கி வந்த வறட்சியான சூழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
ஆகக் கடைசியாக 2022 பிரெஞ்சு பொது பூப்பந்துப் போட்டியில் பேர்லி-தீனா பட்டத்தை வென்றனர்.


