குளுவாங், செப். 13 - ஜோகூர் மாநிலத்தின் மக்கோத்தா சட்டமன்ற தொகுதி
இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை காலை இங்குள்ள
துங்கு இப்ராஹிம் இஸ்மாயில் மண்டபத்தில் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு
மனுக்களைத் தாக்கல் செய்ய காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை
அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் முடிவுக்கு
வந்தவுடன் இத்தேர்தலில் போட்டியிடத் தகுதியுள்ள வேட்பாளர்களின்
பெயர்களை தேர்தல் அதிகாரி அஸுராவத்தி வாஹிட் அறிவிப்பார்.
வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட கணம் தொடங்கி எதிர்வரும் செப்டம்பர்
27ஆம் தேதி இரவு 11.59 மணி வரை 14 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய
வேட்டபாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த மக்கோத்தா தொகுதி குளுவாங் நாடாளுமன்றத் தொகுதியில்
அமைந்துள்ள இரு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் சார்பில் குளுவாங் அம்னோ
இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் ஹூசேன் சைட் அப்துல்லா (வயது 40)
போட்டியிடுவார் என தேசிய முன்னணி அறிவித்துள்ளது. அதே சமயம்
ஜோகூர் எஃப்.ஏ. கால்பந்து குழுவின் முன்னாள் விளையாட்டாளர் முகமது
ஹைஸாம் ஜாபரை (வயது 61) பெரிக்கத்தான் நேஷனல் களமிறக்கியுள்ளது.
இத்தொகுதியில் மொத்தம் 66,318 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.
மக்கோத்தா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஷரிபா அஜிசா சைட்
ஜைன் (வயது 63) கடந்த ஆகஸ்டு மாதம் 2ஆம் தேதி காலமானதைத்
தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


