ஷா ஆலம், செப். 13 - தற்போது நடைபெற்று வரும் 2024 சிலாங்கூர்
விமானக் கண்காட்சியை (எஸ்.ஏ.எஸ்.) முன்னிட்டு நடத்தப்படும் ஒரு நாள்
வேலை வாய்ப்புச் சந்தையில் வான்போக்குவரதுது துறை சார்ந்த சுமார்
3,500 வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இத்துறையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதலாளிகள் 3,459 வேலை
வாய்ப்புகளை வழங்குவதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
உள்நாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தும் மற்றும் இத்துறையில்
அதிகரித்து வரும் தேவைகளை பிரதிபலிக்கும் முயற்சியாக இந்த வேலை
வாய்ப்பு கண்காட்சி விளங்குவதாக அவர் சொன்னார்.
இன்று இங்குள்ள புக்கிட் ஜெலுத்தோங் ஸ்கைபார்க் பிராந்திய வான்
போக்குவரத்து மையத்தில் வேலை வாய்ப்பு கண்காட்சியைத் தொடக்கி
வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த 2024 எஸ்.ஏ.எஸ். கண்காட்சி நேற்று தொடங்கி மூன்று நாட்களுக்கு
இந்த மையத்தில் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகள் எண்ணிக்கையில்
மட்டுமல்லாது வழங்கப்படும் தொழில் வாய்ப்புகளின் தரம் மற்றும் நீண்ட
கால நிலைத்தன்மையைக் கொண்டும் தீர்மானிக்கப்படும் என்று
பாப்பாராய்டு தெரிவித்தார்.
இதனிடையே, மனித வள அமைச்சின் மைபியூச்சர் ஜோப்ஸ்
முன்னெடுப்பின் வழி நாடு முழுவதும் 10 லட்சம் பேர் வேலை
வாய்ப்பினைப் பெற்ற வேளையில் அவர்களில் 268,009 பேர் சிலாங்கூரைச்
சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.
தலையீட்டு நடவடிக்கைகள் வாயிலாக ஆள்பலச் சந்தையை ஆக்கப்பூர்வமாக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது என்று அவர் சொன்னார்.


