அலோர் காஜா, செப்.13 - எட்டு மாத ஆண் குழந்தை மரணமடைந்தது தொடர்பில் குழந்தை பராமரிப்பு மையத்தின் பராமரிப்பாளர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் தியோ சூ யீ முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது
34 வயதான அபிபா அப்துல்லா ஷுஹைமி என்ற அந்தப் பெண்மணி கண்ணீருடன் தலையை அசைத்தார்.
கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் எந்த வாக்கு மூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஜாலான் கெலேமாக் உத்தாமா 3, தாமான் கெலேமாக் உத்தாமாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் முகமது அல் பாத்தே அம்ரி முகமது ஃபிக்ரி அம்ரி என்ற குழந்தைக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


