NATIONAL

சமூகநல இல்லங்களிலிருந்து 402 சிறார்கள் மீட்பு - மலேசியாவுக்கு யுனிசெஃப் பாராட்டு

13 செப்டெம்பர் 2024, 2:35 AM
சமூகநல இல்லங்களிலிருந்து 402 சிறார்கள் மீட்பு - மலேசியாவுக்கு யுனிசெஃப் பாராட்டு

கோலாலம்பூர், செப் 13 - சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள சமூகநல இல்லங்களிலிருந்து 402 சிறார்களை  மீட்டதற்காக அரச மலேசிய போலீஸ்படை மற்றும் இதர அதிகாரிகளை யுனிசெஃப் பாராட்டியுள்ளது.

சுயநலத்திற்காக அந்த சிறார்களின் உழைப்பு சுரண்டப்பட்டதோடு அவர்கள்  புறக்கணிப்புக்கும் ஆளாகினர்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அச்சிறார்களின் வேதனைக்கான முடிவையும் அவர்கள் குணமடைவதற்கான தொடக்கத்தையும் குறிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம் என மலேசியாவில் உள்ள யுனிசெஃப் பிரதிநிதி ராபர்ட் காஸ் தெரிவித்தார்.

சிறார்கள்  கற்பனை செய்து பார்க்க முடியாத பயங்கரங்களை அனுபவித்துள்ளதோடு அவர்களுக்கு நீண்டகால நிபுணத்துவ  மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவு தேவைப்படும் என்று காஸ் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு தீவிரமானது. அது வாழ்நாள் முழுவதும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள சிறார்களுக்கு சமூகநல  இல்லங்களை திறம்பட கண்காணிக்கக்கூடிய தகுதி வாய்ந்த சமூக பணியாளர்களின் ஆதரவு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெற்றோரின் கவனிப்பு இல்லாத சிறார்களைப் பாதுகாப்பதிலும் குடும்பம்-குழந்தைக்கு இடையிலான தேவையற்ற பிரிவினையைத் தடுப்பதிலும் அரசாங்கத்திற்கு உதவ யுனிசெஃப் தயாராக உள்ளது.

சிறார்களுக்கு எதிரான அனைத்து வடிவங்களிலுமான வன்முறைக்கு  எதிராக விட்டுக் கொடுக்காத நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இது. ஆதரவான குடும்பச் சூழலில் வளரும் உரிமை ஒவ்வொரு குழந்தைக்கும் உண்டு என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.