லஹா டத்து, செப். 12- இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு என்ற
முறையில் தனக்கும் தனது மக்களுக்கும் எது சிறந்தது என்பதை முடிவு
செய்யும் உரிமையை மலேசியா கொண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அனைத்து நாடுகளுடனும் சிறப்பான நட்புறவை பேணி வர மலேசியா
விரும்புவதால் இந்த விவகாரத்தில் நாட்டின் மீது எந்த தரப்பும் அழுத்தம்
கொடுக்க முயற்சிக்க முடியாது என்று அவர் சொன்னார்.
கோலாலம்பூருக்கும் மாஸ்கோவுக்கும் இடையே உறவை வலுப்படுத்தவும்
மலேசியாவிடமிருந்து செம்பனை எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய
ரஷியாவை ஊக்குவிக்கவும் தாம் அதிபர் விலாடிமிர் புதினுடன் சந்திப்பு
நடத்தியதாக அண்மையில் ரஷியாவுக்கு வருகை மேற்கொண்ட பிரதமர்
சொன்னார்.
அதிபர் விலாடிமிர் புதினுடனான எனது சந்திப்பைத் தொடர்ந்து
ரஷியாவுடான உறவை ஏன் மலேசியா வலுப்படுத்த விரும்புகிறது?
அப்படியனால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் என்ன நினைக்கும்? என்று
சிலர் கேள்வியெழுப்புகின்றனர். நாம் சுதந்திரமான யாருக்கும் கட்டுப்படாத
தேசம். நமது நாட்டிற்கு எது நல்லதோ, அதை தேர்வு செய்வோம் என்றார்
அவர்.
எல்லா நாடுகளுடனும் அணுக்கமான நட்புறவை நாம் பேணி வர
வேண்டும். அதே சமயம் எந்த நாடும் நம்மீது அழுத்தம் கொடுக்க
முடியாது என அவர் குறிப்பிட்டார்.
இந்தியா, சீனா, எகிப்து மற்றும் நெதர்லாந்து ஆகியவை மலேசியாவிடமிருந்து அதிக செம்பனை எண்ணெய்யை வாங்கும் நாடுகளாக விளங்குகின்றன. அந்த மூலப்பொருளின் இறக்குமதியை அந்நாடுகள் அதிகரிப்பதை உறுதி செய்ய நாம் பாடுபட்டு வருகிறோம் என்று அவர் சொன்னார்.
செம்பனை எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும்படி நாம் ரஷியாவை
கேட்டுக் கொண்டுள்ளோம். அதனால்தான் அந்நாடு உடனான உறவை
வலுப்படுத்தியிருக்கிறோம். சீனாவும் செம்பனை ஏற்றுமதியை அதிகரிக்க
ஒப்புக் கொண்டுள்ளது.
நான் அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது
அவரும் மலேசியாவிடமிருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதியை
அதிகரிப்பதாக வாக்குறுதியளித்துள்ளார் என்றார் அவர்.


