ஷங்ஹாய், செப். 12- அனைத்து உணவகங்கள் மற்றும் உணவுத்
தயாரிப்புத் துறைகள் ஹலால் சான்றிதழ் வைத்திருப்பதை
கட்டாயமாக்கும் பரிந்துரை மீது முடிவெடுக்கும் அதிகாரம் ஆட்சியாளர்கள்
மன்றத்தின் கையில் உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர்
அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.
இந்த விவகாரம் தற்போது பரிந்துரை நிலையில் மட்டுமே உள்ளதோடு
அது இன்னும் நிரந்தரச் சட்டமாக்கப்படவில்லை என்பதால் இதனை
சர்ச்சைக்குரிய விஷயமாக ஆக்கக் கூடாது என்று அவர் சொன்னார்.
ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்கும் பரிந்துரை தங்களுக்கு
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று எந்த தரப்பினரும்
கருதக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஹலால் உள்பட சமயம் சார்ந்த விவகாரங்கள் ஆட்சியாளர்
மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டதாக உள்ளது. ஹலால்
சான்றிதழைக் கட்டாயமாக்குவதா? இல்லையா? என்பதை முடிவு செய்யும்
பொறுப்பை ஆட்சியாளர்களிடம் விட்டு விடுவோம் என்றார் அவர்.
இந்த விவகாரம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால்
இது சர்ச்சைக்குரிய விஷயமாக ஆகாமலிருப்பதை உறுதி செய்ய
பிரதமரின் (டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்) நாங்கள் பின்பற்றுவோம்
என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாம் நடப்பு செயல்முறைக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் மலேசிய
ஹலால் மன்றத்தின் தலைவராக இருந்தாலும் இந்த தொடர்பான
ஆய்வுகளின் முடிவு குறித்து எச்சரிக்கையான அணுகுமுறையைக்
கடைபிடிப்பேன் என அவர் சொன்னார்.
சீனாவுக்கான இரண்டு நாள் பயணத்தின் இறுதி நாளான இன்று மலேசிய
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹலால் சான்றிதழ் தொடர்பான அறிக்கையை அடுத்த வாரம்
அமைச்சரவையில் தாக்கல் செய்யும்படி பிரதமர் பணித்துள்ளதாக தொடர்பு
அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் நேற்று கூறியிருந்தார்.
பன்றி இறைச்சி மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யாத
உணவகங்கள் மற்றும் உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் ஹலால்
சான்றிதழைக் கொண்டிருப்பதை கட்டாயமாக்குவது குறித்து மலேசிய
இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா பரிசீலித்து வருவதாக பிரதமர் துறை
அமைச்சர் (சமய விவகாரம்) டத்தோ முகமது நா‘ய்ம் மொக்தார் கடந்த
6ஆம் தேதி கூறியிருந்தார்.


