மூவார், செப். 12- வயதான தன் பெற்றோர்கள் மற்றும் உறவுக்காரப்
பெண்யை கொலை செய்ததோடு வீட்டிற்கும் தீயிட்டதாகக் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ள வேலையில்லாத ஆடவருக்கு மற்றொரு உறவுக்காரப்
பெண்ணைத் தாக்கி காயப்படுத்திய குற்றத்திற்காக ஒன்பது ஆண்டுச்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அஸ்மான் முகமது நோர் (வயது 48) என்ற அந்த ஆடவர் தனக்கு எதிரான
குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி நரிமான்
பாட்ருடின் இந்த தண்டனையை விதித்தார்.
மேலும், இக்குற்றத்திற்கு 5,000 வெள்ளி அபராதம் விதித்த நீதிபதி, அபராதத்
தொகையைச் செலுத்தத் தவறினால் ஐந்து மாத சிறைத்தண்டனை
அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி விடியற்காலை 1.00 மணிக்கும் 3.00
மணிக்கும் இடையே மூவார், கம்போங் பாயா ரெடான், ஜாலான்
செக்கோலாவில் உள்ள ஒரு வீட்டில் 14 வயதுப் பெண்ணைத் தாக்கி
காயப்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை,
அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் தண்டனைச்
சட்டத்தின் 326வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியிருந்தார்.
அந்த இளம் பெண்ணுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தியதற்காகக்
குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருத்தமான தண்டனையை வழங்கும்படி
அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் முகமது அரிப் மர்ஜூக்கி கேட்டுக்
கொண்டார். அஸ்மான் தனது கருணை மனுவில், இச்செயலுக்காக தாம்
மிகவும் வருந்துவதாக கூறினார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த வளர்ப்புச் சகோதரியும் பாதிக்கப்பட்ட
பெண்ணும் கொளுந்து விட்டெரியும் வீட்டிலிருந்து வெளியே வந்து சந்தேக
நபரிடம் உதவி கோரிய போது அந்நபர் அவர்கள் மயக்கமடையும் வரை
கட்டையால் தாக்கியதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


