ஷா ஆலம், செப். 12- தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி வான்
போக்குவரத்து மையமாக சிலாங்கூர் துரித வளர்ச்சி கண்டு வருவதாக
முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இந்த இலக்கை அடையும் நோக்கில் மாநில அரசு குறிப்பிடத்தக்க
முதலீடுகளை ஈர்ப்பதற்கும் புதுமைகளைப் புகுத்துவதற்கும் உள்நாட்டு
நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக
இன்று ஸ்கைபார்க் பிராந்திய வான் போக்குவரத்து மையத்தில்
நடைபெறும் 2024 சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியின்
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் சிலாங்கூர் மாநில
மக்களுக்கு உயர் வருமான தரும் வேலை வாய்ப்புகளை
உருவாக்குவதற்கும் இந்த முன்னெடுப்பு அவசியமாகிறது என்று அவர்
தெரிவித்தார்.
கடந்தாண்டு 5,530 கோடி வெள்ளி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதைச்
சுட்டிக்காட்டிய அவர், இத்தொகையில் பெரும்பகுதி வளர்ச்சியடைந்து
வரும் வான்போக்குவரத்து துறையுடன் தொடர்புடையதாக இருக்கிறது
என்றார்.
நாட்டின் 67 விழுக்காட்டு வான் போக்குவரத்து பொருளாதாரம்
இம்மாநிலத்தை மையம் கொண்டுள்ளது. இத்துறையின் வளர்ச்சியில்
சிலாங்கூர் முன்னணி இடமாக திகழ்கிறது என்றார் அவர்.
நமது முதலீட்டாளர்கள் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான உகந்த மற்றும்
விரிவான சூழலை நாம் வழங்குகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
வான் போக்குவரத்து துறைக்கு எதிர்வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் 32,000
திறன் பெற்ற தொழிலாளர்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு திறன் பெற்ற இளம் தலைமுறையினரை உருவாக்க சிலாங்கூர் ஏரோ பார்க், சிலாங்கூர் ஏரோஸ்பேஸ் அப்பரண்டிஷிப் திட்டம் ஆகியவைற்றின் மீது மாநில அரசு கவனம் செலுத்துகிறது என்று அவர் சொன்னார்.


