ஷா ஆலம், செப். 12- முப்பதாயிரம் வெள்ளி கையூட்டு தொடர்பான
விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்ட இரு அரசு
பணியாளர்கள் உள்ளிட்ட மூவர் நேற்று தொடங்கி நான்கு நாட்களுக்குத்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (ஏம்.ஏ.சி.சி.) சிலாங்கூர் மாநிலக்
கிளை செய்து கொண்ட விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட்
அமீரா மஸ்துரா காமிஸ், 30 முதல் 40 வயது வரையிலான இரு பெண்கள்
மற்றும் ஒரு ஆடவரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை வழங்கினார்.
போதைப் பொருள் விசாரணை தொடர்பான இரசாயன அறிக்கையின்
முடிவை மாற்றுவதற்குப் பிரதியுபகாரமாக அவ்விரு அரசு ஊழியர்களும்
கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் தலா 15,000 வெள்ளியை
கையூட்டாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அவ்விரு அரசு பணியாளர்களும் மூன்றாவது சந்தேகப் பேர்வழியின்
வங்கிக் கணக்கு வாயிலாக தங்கள் கணக்கிற்குப் பணத்தை
மாற்றியுள்ளதாகவும் கையூட்டு பெறுவதில் உடந்தையாக இருந்தது
மற்றும் பிரதான சந்தேகப் பேர்வழிகள் சார்பில் கையூட்டைப் பெற்றது
தொடர்பில் மூன்றாவது சந்தேகப் பேர்வழியும் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும் வட்டாரம் கூறியது.
அந்த மூன்று சந்தேகப் பேர்வழிகளும் நெகிரி செம்பிலான் மாநில
எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு மணி 9.15க்கும்
9.30க்கும் இடையே கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை பெர்னாமாவிடம்
உறுதிப்படுத்திய சிலாங்கூர் மாநில எம்.ஏ.சி.சி. இயக்குநர் டத்தோ
அலியாஸ் சலிம் 2000ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி.சட்டத்தின் 17(ஏ) பிரிவின் கீழ்
இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.


