கோலாலம்பூர், செப்.12 - யாகி புயல் தாக்கம் காரணமாக வட வியட்னாமின் ஹா லாங் மற்றும் சா பா ஆகிய பகுதிகளுக்கான பயணத் திட்டங்களை தற்போதைக்கு ஒத்திவைக்குமாறு மலேசியர்களை ஹனோய் நகரில் உள்ள மலேசியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வானிலை தொடர்பான எச்சரிக்கையை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அந்த தூதரகம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும், வேலை செய்யும் அல்லது பயணிக்க விரும்பும் மலேசியர்கள் அடுத்த சில நாட்களுக்கு உள்ளூர் செய்திகளை அணுக்கமாகக் கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டது.
எங்கள் தூதரகத்துடன் https://ekonsular.kln.gov.my/
உடனடி தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் அதிகாரிகளை +849-0418 5610 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது mwhanoi@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பலாம் .
யாகி சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் லாவோ காய், யென் பாய், தாய் நுயென் மற்றும் காவ் பாங் ஆகிய இடங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தூதரகம் கூறியது.
தொடர்ந்து மழை நீடிப்பதாலும் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும் ஹனோய் உட்பட வடக்குப் பகுதிகளில் பரவலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாகி சூறாவளியைத் தொடர்ந்து நகரங்கள் மற்றும் வடக்கு மாநிலங்களில் ஏற்பட்ட சிக்கலான வெள்ள அவசர நிலையைக் கையாள அமைச்சுகள், அரசு ஏஜென்சிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்ற பிரதமர் பாம் மின் சின் உத்தரவிட்டார்.
சூறாவளிக்கு பிந்தைய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் நேற்று தினம் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 296 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் காணாமல் போயுள்ளனர் என்று சட்ட அமலாக்கம் தொடர்பான நிரந்தர அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் ஆற்றிய உரையில் பிரதமர் குறிப்பிட்டார்


