கோத்தா கினபாலு, செப். 12- இங்குள்ள தஞ்சோங் ஆரு பொழுதுபோக்கு
பூங்காவில் மெதுவோட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூவரை நீர் நாய்கள்
தாக்கின.
நேற்று அதிகாலை 6.40 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 40 மற்றும்
54 வயதுடைய இரு பெண்களும் 56 வயதுடைய ஆணும் காயமடைந்ததாகக்
கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி காசிம் மூடா
கூறினார்.
அந்த மூவரும் மெதுவோட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது
பின்புறமாக கும்பலாக வந்த நீர் நாய்கள் அவர்களைத் தாக்கின. இந்த
தாக்குதலில் அவர்களுக்கு கை, கால் மற்றும் தலையில் கடிபட்ட
காயங்களும் கீறல்களும் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
என்னும், இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து
தாங்கள் இதுவரை புகார் எதனையும் பெறவில்லை என்று அவர்
சொன்னார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பொழுதுபோக்கு பூங்காவை
உடனடியாக மூடும்படி சம்பந்தப்பட்ட பூங்கா நடத்துநருக்கு தாங்கள்
உத்தரவிட்டுள்ளதாகக் கோத்தா கினபாலும் மாநகர் மன்றத்தின் டத்தோ
பண்டார் டத்தோஸ்ரீ டாக்டர் சபின் சமிதா கூறினார்.
அந்த பூங்காவிற்கு வருகை புரிவோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும்
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கும் ஏதுவாக அந்த
பூங்காவை மூட தாங்கள் உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை மதித்து நடக்கும்படி
பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


