NATIONAL

உலுதிராம் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் குறித்து அவதூறு - துப்புரவுத் தொழிலாளிக்கு சிறை, அபராதம்

11 செப்டெம்பர் 2024, 8:47 AM
உலுதிராம் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் குறித்து அவதூறு - துப்புரவுத் தொழிலாளிக்கு சிறை, அபராதம்

தாப்பா, செப். 11- உலு திராம் காவல் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்ட குற்றத்திற்காக துப்புரவுத் தொழிலாளிக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஏழு நாள் சிறைத் தண்டனையும் 800 வெள்ளி அபராதமும் விதித்து  தீர்ப்பளித்தது.

தனக்கெதிரான குற்றச்சாட்டை வான் அப்துல் கயூம் வான் முகமது  ரட்சுவான் (வயது 25) என்ற அந்த ஆடவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அனிஸ் ஜைனப் பவான் தே இந்த தீர்ப்பை வழங்கினார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஏழு நாள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

கார்ப்ரல் அகமது அஸ்ஸா ஃபாஹ்மி அஸ்ஹார் (உலு திராம் காவல் நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்)  குறித்து அவதூறாகப் பேசியதாக அந்த நபர் குற்றம் சாட்டப்பட்டார்.  கொல்லப்பட்ட போலீஸ்காரரின் தந்தையான  அசார் கைடின் (வயது 55)  கடந்த ஆகஸ்டு 28ஆம் தேதி மதியம் 2.00 மணிக்கு சுங்காய், ஃபெல்டா சுங்கை கிளா தேசியப் பள்ளியில்  அந்தப் பதிவைப் படித்தார்.

இறந்தவரின் நல்ல பெயரைக் கெடுக்கும் நோக்கத்தோடும் புண்படுத்தும் வகையிலும் அவதூறான கருத்துகளை  தனது முகநூல்  மூலம் பாதிக்கப்பட்டவரின் சகோதரி நூர் அஸ்ஸா அஸ்யாயோரென் அசாருக்கு  (வயது 29)  அனுப்பியதாக வான் அப்துல் கயூம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டப் பிரிவு 500 இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரின் நடவடிக்கைகள்  மறைந்த தன் மகன் லஞ்சம் வாங்கியவரைப் போலவும் அவர் மரணத்திற்கு தகுதியானவர் போலவும் சித்தரிக்குப் வகையில் இருந்ததாக விசாரணையின் போது​​சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட அசார் கூறினார்.

எனவே, இது எனது மறைந்த மகனுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வினால் வேதனையான  தருணத்தை அனுபவித்த எங்கள் குடும்பத்தின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கையால் ஒரு குடும்பமாக நாங்கள்  வருத்தப்படுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த மே 17 ஆம் தேதி  21 வயது இளைஞர் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் உலு திராம் காவல் நிலையத்தைச் சேர்ந்த இருவர்   கொல்லப்பட்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.