ஷா ஆலம், செப். 11- மாநில அரசின் மெகா சாலை சீரமைப்புத் திட்டம் 2.0
எதிர்வரும் அக்டோபர் மாதம் தொடங்கி இரு மாத காலத்தில் முற்றுப் பெறும்.
வாகனமோட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாக
சீரமைக்க வேண்டிய சாலைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை
அளிக்கப்படும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த திட்டத்தை அமல்படுத்த நாம் 2 கோடி வெள்ளிக்கும் அதிகமானத்
தொகையை ஒதுக்கீடு செய்துள்ளோம். சாலைகள் அடையாளம்
காணப்பட்டவுடன் செப்பனிடும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்
என்று அவர் தெரிவித்தார்.
பழுது பார்க்கப்படவுள்ள சாலைகளில் ஊராட்சி மன்றங்கள், மாவட்டங்கள்
மற்றும் பொதுப்பணித் துறையின் கீழுள்ள சாலைகளும் அடங்கும் என்று
அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள மாநில அரசுத் தலைமைச் செயலகத்தின் டத்தாரான்
பாஹ்லாவானில் உயர் தொழில்நுட்பத்திலான சாலை செப்பனிடும்
இயந்திரத்தின் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
மாநில அரசு கடந்தாண்டு 5 கோடி வெள்ளி செலவில் மாபெரும் சாலை
செப்பனிடும் திட்டத்தை அமல்படுத்தியது. மக்களுக்கான அடிப்படை
வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலான இந்த திட்டத்தில் சாலை
பழுதுபார்ப்பு மற்றும் விரிவாக்க பணிகளும் அடங்கியிருந்தன.
மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 94.9 கிலோ
மீட்டர் பகுதியை இந்த சாலை சீரமைப்புத் திட்டம் உள்ளடக்கியிருந்தது.
எனினும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் சாலை
சீரமைப்புப் பணிகளுக்கு அதிக செலவு பிடிப்பதைக் கருத்தில் கொண்டு
மாநில அரசு இவ்வாண்டு தொடங்கி மெகா சாலை சீரமைப்பு பணிகளை
ஆண்டுதோறும் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது.


