ஷா ஆலம், செப். 11- தானியச் சோள சேகரிப்பு மையத்தை சிலாங்கூர்
மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) தஞ்சோங்
சிப்பாட்டில் நிர்மாணித்து வருகிறது.
சோளத்தை உலர்த்தும் மற்றும் உடைக்கும் இயந்திர வசதிகளுடன் 300
ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த மையம் தற்போது 30
விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக அதன் தலைமைச் செயல்முறை
அதிகாரி டத்தோ டாக்டர் கைரில் முகமது ராஸி கூறினார்.
இந்த மையம் சோளத்தை சேமித்து வைக்கும் வசதியையும்
கொண்டுள்ளதோடு 200 டன் வரையிலான சோளத்தை இங்கு
பத்திரப்படுத்தி வைக்க முடியும் என்று அவர் சொன்னார்.
தற்போது சோள அறுவடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் உற்பத்தி மிகவும் மனநிறைவளிக்கும் வகையில் உள்ளது என்று
சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.
உயர் தரத்திலான சோள உற்பத்தித் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து
விவாதிப்பதற்காக பி.கே.பி.எஸ். அதிகாரிகள் குழு விரைவில் சபா
மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பில் நாங்கள் ஏற்கனவே பேச்சு நடத்தியுள்ளதோடு
இதன் தொடர்பான செயலறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
இத்திட்டத்தில் ஒத்துழைப்பு நல்குவதற்கான விருப்பத்தை சபா
வெளிப்படுத்தியுள்ளது என்றார் அவர்.
இதன் அடிப்படையில் தானியச் சோள பயிரீட்டுக்கான பொருத்தமான
இடத்தை அடையாளம் காண நாங்கள் விரைவில் சபா மாநிலத்திற்குப்
பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
பி.கே.பி.எஸ். வாயிலாக உயர்தர தானியச் சோள பயிரீட்டுத் திட்டத்தை
கடந்தாண்டு தொடக்கிய மாநில அரசு இவ்வாண்டு ஜனவரி 21ஆம் தேதி
118 டன் சோளத்தை அறுவடை செய்தது.


