ஷா ஆலம், செப். 10 - இயற்கை பேரிடர் ஏற்படும் அளவுக்கு தற்போது காணப்படும் நிச்சயமற்ற பருவநிலை மாற்றத்தை மாநில அரசு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
வானிலை தொடர்பான சமீபத்திய நிலையை அறிந்து கொள்வதற்காகப் பேரிடர் மேலாண்மைப் பிரிவு மலேசிய வானிலை ஆய்வுத் துறையுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாக பேரிடர் மேலாண்மைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
தற்போது நிலவும் நிச்சயமற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்பாராத வகையில் பேரிடர் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.
தற்காலிக நிவாரண மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்வதற்காக சமூக நலத்துறையுடன் தாங்கள் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.
பேரிடர் ஏற்படும் போது திறக்கப்படும் அனைத்து துயர் துடைப்பு மையங்களும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வசதியைக் கொண்டவையாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். வசதிகள், அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் விஷயத்தில் அவர்களின் உரிமையை நாம் ஒருபோதும் நிராகரிக்கக் கூடாது என்றார் அவர்.
ஆகவே, தற்காலிக நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகள் மற்றும் மண்டபங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வோம். தேவை ஏற்பட்டால் அவற்றை தரம் உயர்த்துவோம் என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான தயார் நடவடிக்கையாக 1,152 துயர் துடைப்பு மையங்கள் அரசு பதிவேட்டில் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக நஜ்வான் முன்னதாக மாநில சட்டமன்றத்தில் கூறியிருந்தார்.


