கோலாலம்பூர், செப். 10 - உள்நாட்டு வருமான வாரியத்தின் 139 கோடி வெள்ளி கூடுதல் வரி விதிப்பினால் பாதிக்கப்பட்ட தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.) நிறுவனத்தை எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள தள்ளுபடி விண்ணப்பம் மீதான நீதித்துறை மறுஆய்வு விசாரணையில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதே சமயம், குறிப்பிட்ட அந்த தேதி வரை கூடுதல் வரி விதிப்பு அறிவிப்புகளை வருமான வரி வாரியம் அமல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்று அந்த மின் விநியோக நிறுவனம் மலேசிய பங்குச் சந்தை ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த 2020 மற்றும் 2021 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான கூடுதல் மதிப்பீட்டுத் தொகையான 68 கோடியே 58 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி மற்றும் 70 கோடியே 52 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி கோரிக்கையை டி.என்.பி. நிறுவனம் வருமான வரி வாரியத்திடமிருந்து கடந்த ஆகஸ்டு 19 ஆம் தேதி பெற்றது.


