கோலாலம்பூர், செப். 10 - சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 4, அன்-நுர்
பள்ளிவாசலில் உள்ள இரு உண்டியல்களை நெம்பி சுமார் 3,000
வெள்ளியை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நீல நிற சட்டையும் சாக்லேட் நிற கால்சட்டை மற்றும் தோளில் உணவு
பட்டுவாடா பேக்குடன் காணப்பட்ட அந்த ஆடவர் நேற்று முன்தினம்
காலை 11.40 மணியளவில் உண்டியல்களை நெம்பி அதிலிருந்த பணத்தை
எடுக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில்
பதிவாகியுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான்
அஸ்லான் வான் மாமாட் கூறினார்.
உண்டியல் பணம் காணாமல்போன விஷயத்தை பள்ளிவாசல் செயலாளர்
அன்றைய தினம் இரவு 9.30 மணியளவில் கண்டுபிடித்ததாக அவர்
குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 380வது பிரிவின் கீழ்
விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், அந்த ஆடவர் குறித்த
தகவல் அறிந்தவர்கள் 03-78627222 எண்களில் சுபாங் ஜெயா மாவட்ட காவல்
துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.


