சிப்பாங், செப். 10 - பொது மற்றும் தனியார் கூட்டு மேம்பாட்டுத் திட்ட அமலாக்கம் சிலாங்கூரில் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் உதவும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
ஷா ஆலம் நெடுஞ்சாலை ஷா ஆலம்-உலு கிளாங் நெடுஞ்சாலை, டாமன்சாரா-ஷா ஆலம் நெடுஞ்சாலை மற்றும் செத்தியா வங்சா-பந்தாய் நெடுஞ்சாலை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க பலன்களைத் தரும் திட்டங்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.
இதர கூட்டுத் திட்டங்களில் கின்றாரா தீயணைப்பு நிலையம், மின்-நில நிர்வாக முறை, புக்கிட் தாகார் சுகாதார குப்பை அழிப்பு மையம், புஞ்சாக் ஆலம் மற்றும் டிங்கில் மாரா பல்கலைக்கழக வளாகம் மற்றும் மேற்கு மற்றும் வடக்கு துறைமுகங்கள் ஆகியவையும் அடங்கும்.
இந்த பொது-தனியார் கூட்டுத் திட்டம் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், சமூக நலனிலும் குறிப்பிடத்தக்க பங்கினை வழங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
உதாரணத்திற்கு, மேற்கு துறைமுகத்தில் சி10 முதல் சி17 வரையிலான கொள்கலன் முனைய விரிவாக்கத் திட்டம் 5,500 கோடி வெள்ளி பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1,900 கோடி வெள்ளி பங்களிப்பையும் வழங்குகிறது என்று அவர் கூறினார்.
பொது-தனியார் திட்டத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் நேற்று இங்கு தொடக்கி வைக்கப்பட்ட பிக்காஸ் 2030 தொடக்க விழாவில் அமிருடின் இதனைத் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் 6,000 முழுநேர வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் சமூகவியல் தாக்கம் ஒட்டுமொத்த மக்களும் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பினை உருவாக்கும் என்றும் அமிருடின் கூறினார்.


