கோலாலம்பூர், செப். 10 - சுகாதார அமைச்சின் அனுமதியின்றி அழகு
சாதனப் பொருள்களை விற்ற குற்றத்திற்காக மொத்த மற்றம் சில்லரை
விற்பனை நிறுவனமான மைடின் ஹோல்டிஸ் பெர்ஹாட்டிற்கு இங்குள்ள
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 20,000 வெள்ளி அபராதம் விதித்தது.
மைடின் நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ராஜா அஸ்லான்
ராஜா இஸ்மாயில் (வயது 40) மற்றும் ரோசிலான் முகமது ஜின் (வயது 50)
ஆகிய இருவரும் இரு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டதைத்
தொடர்ந்து மாஜிஸ்திரேட் ஃபாரா நபிஹா முகமது டின் இத்தீர்ப்பை
வழங்கினார்.
குற்றஞ்சாட்டப்பட்ட அவ்விருக்கும் தலா 10,000 வெள்ளி அபராதம் விதித்த
நீதிமன்றம் அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் ஓராண்டு
சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிட்டது. எனினும்,
அவ்விருவரும் அபராதத் தொகையைச் செலுத்தினர்.
கடந்தாண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி காலை 11.00 மணியளவில்
காம்ப்ளெக்ஸ் சினார் கோத்தா மற்றும் தாமான் டானாவ் கோத்தா ஆகிய
இடங்களில் உள்ள தங்கள் பேரங்காடிகளில் 209 பெட்டி மற்றும் 23 செட்
அங்கீகரிக்கப்படாத பல்வேறு சுவைகளிலான பற்பசைகளை விற்பனை
செய்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்து.
கூட்டரசு பிரதேச மற்றும் புத்ரா ஜெயா சுகாதார இலாகாவின் மருந்தகச்
சேவைப் பிரிசைச் சேர்ந்த சட்ட அதிகாரி சித்தி நுர் ஷராஹிடா ஜெயதான்
இந்த வழக்கை நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின்
சார்பில் யாரும் ஆஜராகவில்லை.


