கோலாலம்பூர், செப். 9- ஹலால் சான்றிதழ் தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில் சீ பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் நாளை காவல்துறையில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுத் துறை நாளை காலை 10.00 மணிக்கு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார்.
மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாக்கிம்) பிரதிநிதிகள் உள்ளிட்ட இதர சாட்சிகளும் இந்த விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
அவர் (திரேசா) வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார். இதர சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறுவது பின்னர் தீர்மானிக்கப்படும், தேவைப்பட்டால் அழைக்கப் படுவார்கள் என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்ட போது கூறினார்.
ஆட்சியாளர்கள், சமயம் மற்றும் இனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பான சீரான செயலாக்க நடைமுறைக் கேற்ப தண்டனைச் சட்டத்தின் 298 மற்றும் 505(பி) பிரிவு, 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 வது பிரிவின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுவதாக ரஸாருடின் நேற்று கூறியிருந்தார்.
பன்றி இறைச்சி மற்றும் மதுபானங்கள் சம்பந்தப்படாத உணவகங்கள் மற்றும் உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் கொண்டிருப்பதை கட்டாயப் படுத்தும் பரிந்துரை பரிசீலினையில் உள்ளதாக ஜாக்கிம் முன்னதாகக் கூறியிருந்தது.
இந்த கட்டாய சான்றிதழ் நடைமுறை ஆயிரக்கணக்கான மலாய் வர்த்தகர்கள் உள்பட உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்பதோடு நாட்டிற்கும் அவமானத்தை ஏற்படுத்தும் என்று திரேசா கோக் கூறியிருந்தார்.


